தமிழ்நாடு

தேர்தல் வெற்றிக்காக 18 வருடமாக போராடுகிறேன்- தூத்துக்குடியில் சீமான் பேச்சு

Published On 2024-03-30 08:14 GMT   |   Update On 2024-03-30 08:14 GMT
  • தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
  • குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது.

தூத்துக்குடி:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு வந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலமும், தண்ணீரும் கெட்டு விடும் என்று சொல்லவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதமாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போலீ சாருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை.

மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைத்து கட்சியினரும் துடித்தனர். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து துடித்தேன்.

வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து நல்ல பொருட்களாக வாங்குவதை போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன்.

தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.

குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News