தமிழ்நாடு

காதலர் தினத்தில் வைகை அணை பூங்காவுக்கு வந்த காதலர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

Published On 2024-02-14 05:53 GMT   |   Update On 2024-02-14 05:53 GMT
  • பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
  • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

இங்கு வாரம் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது தவிர விடுமுறை நாட்களில் அதிக அளவு நபர்கள் வருகை தருவதுண்டு.

இன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் வைகை அணை பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுழைவு வாயில் முன்பு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

அவர்கள் பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து திருமணம் செய்து வைக்கப்போவதாக பல்வேறு அமைப்புகள் தயார் நிலையில் இருந்தன.

மேலும் காதல் ஜோடிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவர்கள் அறிவித்திருந்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு வந்தவர்களை தொடர்ந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சந்தோஷமாக பொழுதை கழிக்க வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல தேனி மாவட்டத்தின் மற்றொரு சுற்றுலா தலமாக குரங்கணி பகுதி உள்ளது. அங்கும் காதல் ஜோடிகள் குவியத் தொடங்கியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காதலர்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News