தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தால் இரட்டை இலை சின்னத்தை இப்போதைக்கு பெற முடியாது- தராசு ஷியாம் கருத்து

Published On 2024-03-24 08:46 GMT   |   Update On 2024-03-24 08:46 GMT
  • சிவில் வழக்கில் நிவாரணம் கிடைத்தால் அவர் முயற்சி செய்து பார்க்கலாம்.
  • பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டி என்பதுதான் ஓ.பி.எஸ்.சின் நிலைப்பாடாகும்.

அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வரும் சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்கிற கணக்கிலேயே ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அரசியல் விமர்சகரான தராசு ஷியாமிடம், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். ஒரு வேளை வெற்றி பெற்றால் அவரால் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர முடியுமா? அவரது தற்போதைய நடவடிக்கைகள் பலன் அளிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வத்தால் இரட்டை இலை சின்னத்தை இப்போதைக்கு பெற முடியாது. ஏனென்றால் உயர்நீதிமன்றத்தில் தடை இருக்கிறது. சிவில் வழக்கில் நிவாரணம் கிடைத்தால் அவர் முயற்சி செய்து பார்க்கலாம்.

அப்போதும் எதிர் தரப்பு மேல்முறையீட்டுக்கு போகும். பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டி என்பதுதான் ஓ.பி.எஸ்.சின் நிலைப்பாடாகும். அது வெற்றியைத் தேடித் தராது. மேலும் அவரது அணியில் இருந்து பலர் தாய் கட்சியான அ.தி.மு.க.வுக்கு திரும்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News