தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி: எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகம்

Published On 2023-09-26 12:53 IST   |   Update On 2023-09-26 12:53:00 IST
  • கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கடைசி நேரத்தில் சீட் கிடைக்காமல் சில கட்சிகள் ஏமாற்றத்துடன் தவித்தன.
  • டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் தக்க வைப்பதற்கும் பேச்சு நடைபெறுகிறது.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாக களத்தில் உள்ள நிலையில் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணியும் களத்தில் இருந்து வந்தது.

இதனால் இந்த 2 கூட்டணிகளும் பாராளுமன்ற தேர்தலை எதிர் எதிராக சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை அண்ணாவை பற்றி தெரிவித்த கருத்துக்கள் பா.ஜனதா-அ.தி.மு.க. உறவில் விரிசலை ஏற்படுத்தி இருந்த நிலையில் கூட்டணிக்கும் அது வேட்டு வைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அ.தி.மு.க. மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார். இதற்காக பாரதிய ஜனதா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள கட்சிகளுடன் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய கட்சிகளுடன் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கடைசி நேரத்தில் சீட் கிடைக்காமல் சில கட்சிகள் ஏமாற்றத்துடன் தவித்தன.

அதுபோன்ற கட்சிகளையும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்துள்ள பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றிய முடிவை எடுப்போம் என்றும் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்த கட்சிகளிடம் பேச்சு நடத்தி அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் தக்க வைப்பதற்கும் பேச்சு நடைபெறுகிறது.

இப்படி அ.தி.மு.க.வுடன் தோழமையுடன் இருக்கும் கட்சிகளையும், மேலும் சில கட்சிகளையும் சேர்த்து புதிய கூட்டணியை அமைக்க அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கு வலுவான மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதன்படியே பாரதிய ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமையும் என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. தலைமையில் புதிய அணி அமையும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுமா? இல்லை தங்களோடு ஒத்துப்போகும் சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு தனி அணி அமைக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

Tags:    

Similar News