அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக 17-ந்தேதி நெல்லை வருகை
- அமைச்சர் உதயநிதி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தி.மு.க. தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆர்வமுடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் மாநில தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த மாதம் 4-ந்தேதி தூத்துக்குடியிலும், 5-ந்தேதி தென்காசியிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் வருகிற 17-ந்தேதி முதல் 2 நாட்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை, குமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி வருகிற 17-ந்தேதி காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மதியம் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்று மாலை காரில் புறப்பட்டு நெல்லை வருகிறார்.
அவருக்கு நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் வைத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு அவர் தங்குகிறார்.
மறுநாள்(18-ந்தேதி) காலை நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வர்த்தக மையத்தில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பாளை நேருஜி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
அன்று மாலை நெல்லை டவுனில் உள்ள பள்ளி மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே எழுச்சியுரை ஆற்றுகின்றார்.
அமைச்சர் உதயநிதி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆர்வமுடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.