தியாகி இம்மானுவேல் சேகரனாரை போல் சமூக நீதியை காக்க நாம் போராடவேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- தியாகி இம்மானுவேல் சேகரனார் குடும்பத்தாரின் நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடியில் மணிமண்டபம் சிலையுடன் அமைக்க வேண்டும் என்பதுதான்.
- சமூக நீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக நீதி காப்பதற்காக போராடினார்.
ராமநாதபுரம்:
தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இம்மானுவேல் சேகரன் 66-வது நினைவு நாளையொட்டி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட மாடல் அரசு சார்பாக அமைச்சர்களுடன் நினைவகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகி இம்மானுவேல் சேகரனார் குடும்பத்தாரின் நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடியில் மணிமண்டபம் சிலையுடன் அமைக்க வேண்டும் என்பதுதான். இதனை ஏற்று இன்று தமிழக முதலமைச்சர் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாருக்கு திரு உருவசிலையுடன் மணிமண்டபம் கட்டித் தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்காக இம்மானுவேல் சேகரனாரின் குடும்பத்தினர் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சமூக நீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக நீதி காப்பதற்காக போராடினார். அந்த வகையில் நாம் அனைவரும் சமூக நீதியை காக்க போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.