தமிழ்நாடு

இளைஞர்களை வழிநடத்தும் ஆற்றல் மிகுந்த சக்தியாக மூத்த முன்னோடிகள் திகழ்கிறார்கள்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-02-17 09:43 GMT   |   Update On 2024-02-17 09:49 GMT
  • கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
  • நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஏற்பாட்டில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொற்கிழி, பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:-

மக்கள் அனைவரும் என்னை இளையவர் என்றும், சின்னவர் என்றும், அமைச்சர் என்றும் அழைக்கின்றார்கள். ஆனால் உங்கள் மத்தியில் நான் வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி சின்னவன் தான். நான் அமைச்சராக பதவியேற்று முதன் முதலில் வருகை புரிந்ததும் இந்த சிவகங்கை மண்ணிற்கு தான். இன்று கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

நான் பெரியாரையோ, அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களோடு சேர்ந்து கட்சிக்கு பாடுபட்ட உங்களை இன்று நேரில் பார்க்கும் நான் அவர்கள் ரூபத்தில் உங்களைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு மாவட்ட கழக நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலாவதாக கட்சிக்காக உழைத்த கழக முன்னோடிகளை கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைப்பேன்.



அந்த அடிப்படையில் நான் அமைச்சர் பதவியேற்ற ஒரு வருட காலத்தில் கலந்து கொண்ட எந்த ஒரு கழக நிகழ்ச்சியிலும் கழக முன்னோடிகளான உங்களை குறித்து நான் பேசுவதுண்டு. நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை. அந்த அளவுக்கு உங்களை பார்க்கும் போது பெருமையாகவும், பொறாமையாகவும் கருதுகிறேன். எனவே இளைஞர்களாகிய எங்களை வழிநடத்தும் ஆற்றல் மிகும் சக்தியாக நீங்கள் தான் கழகத்தில் இருக்கிறீர்கள்.

வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அதே உத்வேகத்தோடு பாடுபட்டு வெற்றியடைய செய்யுங்கள் என்று உங்களை இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கழக நிர்வாகிகளான மணி முத்து, சேங்கை மாறன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர கழக, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News