தமிழ்நாடு

கைரேகை வைக்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்தாகாது- அமைச்சர் சக்கரபாணி தகவல்

Published On 2023-10-11 05:05 GMT   |   Update On 2023-10-11 05:05 GMT
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

சென்னை:

தமிழக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசு முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசியை வழங்குகிறது. அந்த அரிசியை பெறும் ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்களை புதுப்பிக்க 'இ.கே.ஒய்.சி.' என்ற இணைய வழியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ரேஷன் கார்டு உள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது வினியோக திட்ட அங்காடியில் உள்ள கருவி மூலம் கைரேகை பதிவுகள் மூலம் தங்களின் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுநடைமுறைப்படுத்தப்பட்டு 45 சதவீத ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி இந்த பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ, பொருட்கள் வாங்க கடைகளுக்கு வரும் போதோ கைவிரல் ரேகை பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு இருந்தது.

சில இடங்களில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வந்தால்தான் பொருட்களை பெற முடியும் என தவறுதலாக தகவல்கள் வந்தன. உடனே அப்படி செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டது. கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ரேஷன் கார்டுகள் இதனால் ரத்து செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News