மிச்சாங் புயல் பாதிப்பு... முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் மு.க.ஸ்டாலின்
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
- அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.
சென்னை:
மிச்சாங் புயல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆகியோர் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டியது அவசியமாகிறது என கூறியுள்ளார்.