தமிழ்நாடு

கமல்ஹாசன் குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகன் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2023-10-11 04:50 GMT   |   Update On 2023-10-11 04:50 GMT
  • நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
  • எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை:

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தாஜூதீன் தலைமையில் அந்த கட்சியினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவலை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் கமல்ஹாசன் கன்னடர். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற ஊர் தான் அவரின் பூர்வீகம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே யூடியூப் சேனலில் இருந்து அதனை அகற்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News