தமிழ்நாடு

ஜூன் 4-ந்தேதி மத்தியில் அமையும் பா.ஜ.க. ஆட்சி தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும்: ஜே.பி.நட்டா பேச்சு

Published On 2024-04-16 06:34 GMT   |   Update On 2024-04-16 08:55 GMT
  • பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
  • திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.

பரமக்குடி:

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை புதுச்சேரியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை வந்தார். விமான நிலையம் வந்த ஜே.பி.நட்டாவுக்கு பா.ஜ.க. பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்திற்கு காலை 11.00 மணிக்கு வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் கிருஷ்ணா தியேட்டர் பகுதிக்கு சென்றார்.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாகன பிரசாரத்தில் ஜே.பி.நட்டா ஈடுபட்டார். அவரது வருகையை முன்னிட்டு பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பிரசாரத்தை முன்னிட்டு அவரது வாகனம் பேருந்து நிலையம், வெள்ளி விழா தோரணவாயில் வழியாக காந்தி சிலை வரை சுமார் 3 கி.மீ. தூரம் சென்றது. அவர் செல்லும் வழியில் இரு புறங்களிலும் பா.ஜ.க.வினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.

பின்னர் காந்தி சிலை அருகே வாகனத்தில் இருந்த படியே ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மிகவும் தகுதி வாய்ந்த, திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு பிரசாரம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழக மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. அவரது குரல் டெல்லியிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடும் அவரை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும். இதற்காக பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் வாக்களிப்பீர்களா?

நடைபெறும் இந்த தேர்தல் வெறும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2047-ல் பாரதம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதமாக, வலிமை பெற்ற பாரதமாக மாறுவதற்கான ஒரு தேர்தலாகும். எனவே 400 சீட்டுக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மத்திய பா.ஜ.க. ஆட்சியில், ஏழைகள் வளம் பெற அதிகமான திட்டங்களை அளித்துள்ளது. ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், மருத்துவ வசதி போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.

ரேசன் கடைகள் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் இது தொடர்ந்து வழங்கப்படும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் மூலம் 25 கோடி ஏழைகள் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். 12 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழகத்திற்கும், ஏராளமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தி.மு.க. என்பது, அநீதி, ஊழல், கட்டப்பஞ்சாயத்து தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளை குவித்துள்ளனர். ஜூன் 4-ந்தேதி அன்று அமையும் ஆட்சி இவர்களை சிறைக்கு அனுப்பும் அல்லது ஆட்சியை விட்டு வெளியே அனுப்பும். ஆகவே பா.ஜ.க. வெற்றி பெற பலாப்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News