தமிழ்நாடு

பொதுச்செயலாளர் தேர்தல்- பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி

Update: 2023-03-28 05:06 GMT
  • சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது.
  • ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

சென்னை:

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.

இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ந்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமான அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருந்த நிலையில் இந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று ஏப்ரல் 11-ந் தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம் என்றும், ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர வழக்காக பதிவு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால், முடிவை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மார்ச் 22-ந் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

அதேவேளையில் மார்ச் 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்து பூர்வமான வாதம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் வழக்குகளின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியாகும்.

அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதும் செல்லும்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும். இவற்றை எதிர்த்து தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை கேட்டதும் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதே சமயத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.

தீர்ப்பு வெளியான அரை மணிநேரத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று தொண்டர்கள் வெற்றிக்கோஷம் எழுப்பினார்கள்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினார்கள். தீர்ப்புக்கு பின்னர் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தலைமை கழகத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள். இதனால் தலைமைக் கழகம் களை கட்டியது.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அப்பீல் செய்தார். நாளை அந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

Similar News