தமிழ்நாடு

2 மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிக்கு இத்தனை லட்சத்துக்கு புதிய கட்டிடமா- மக்கள் அதிர்ச்சி

Published On 2024-01-31 04:59 GMT   |   Update On 2024-01-31 04:59 GMT
  • புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
  • 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.

கூடலூர்:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.

குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News