தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- சவரன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியது

Published On 2024-03-29 03:55 GMT   |   Update On 2024-03-29 06:07 GMT
  • வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.
  • ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாகனியாகவே போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் ஏற்பட்டபோது தங்கம் விலை உயர ஆரம்பித்தது. ரஷியா-உக்ரைன் இடையிலான போரும் தீவிரம் அடைந்ததால் சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் தலைமை வங்கியான மத்திய பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாமல் இருக்கிறது. மேலும் வரும் காலங்களில் அந்த வட்டி தொகையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இது மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்களும், வங்கிகளில் பணத்தை அதிகளவு இருப்பு வைத்திருந்தவர்களும் அவற்றை எடுத்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் மும்பை பங்கு வர்த்தகத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. இதனால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் அதற்கு பதில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். பொருளாதாரம் பாதிக்கப்படும் போது பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கி விடும்.

இத்தகைய காரணங்களால் கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. கடந்த 21-ந்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்தது. அதன் பிறகு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது.

நேற்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,250-க்கு விற்பனையானது. ஒரு பவுன் விலை 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக தங்கத்தின் விலை மிக பயங்கரமாக அதிகரித்தது. மக்களை கதிகலங்க வைக்கும் வகையில் இன்றைய தங்கம் விலை உயர்வு இருந்தது. ஒரு கிராம் 140 ரூபாய் அதிகரித்தது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையானது.

தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக பவுன் ரூ.51,120-ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் கிராம் ரூ. 190-ம், பவுனுக்கு ரூ. 1,520-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி நகை வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி திருமணம் போன்ற விசேஷ நாட்களில் தங்க நகைகளை வாங்க முடியுமா? என்ற ஏக்கத்தையும் அவர்கள் மனதில் எழுந்துள்ளது.

பொதுவாக உறவினர் விட்டு நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் ஒரு கிராம் அல்லது 2 கிராமில் கம்மல் மூக்குத்தி, மோதிரம் போன்றவற்றை வாங்கி பரிசாக கொடுப்பது உண்டு. 2 கிராம் வாங்கினாலும் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் கொடுக்க வேண்டி இருப்பதால் நடுத்தர மக்கள் இத்தகைய நகைகளை வாங்குவதற்கு தயங்குவார்கள் என்று நகை வியாபாரிகள் கருதுகிறார்கள்.

மேலும் ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாகனியாகவே போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். அதே சமயத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் நகை வியாபாரிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தும் நிலவுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.80.80-க்கும், கிலோ 300 ரூபாய் அதிகரித்து ரூ. 80,800-க்கும் விற்பனை ஆகிறது.

Tags:    

Similar News