தமிழ்நாடு

வேறு சமூகத்து பெண்ணை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்

Published On 2023-05-20 05:24 GMT   |   Update On 2023-05-20 06:18 GMT
  • திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
  • 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பாலப்பட்டி ஊராட்சி பழையமாரப்பன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(62). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் விசயமாக ஹைதராபாத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

மாற்றுசமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து பழனிச்சாமி தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூம்பூர் அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். தனது ஊரில் உள்ளவர்களை எப்போதாவது பார்க்க வேண்டும் என நினைத்தால் கூட ஊருக்குள் விடாமல் தடுத்து வந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டார். இறப்பு செய்தி சொல்வதற்காக அந்த ஊருக்கு சென்றபோது அவர்கள் யாரும் வரவில்லை. இதனால் மனம் வெறுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் தந்தையை எடுத்துச்சென்று அடக்கம் செய்தார். தற்போது இவரது தாயாரும் முதுமை காரணமாக இறக்கும் தருவாயில் உள்ளார். அவரும் தான் இறந்துவிட்டால் ஊர்மக்களை அழைத்து தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

ஆனால் ஊர்மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார். காதல் திருமணம் செய்தது தவறா, அவர்கள் வாழ தகுதியற்றவர்களா என கதறி அழுது தனது தாய் நிம்மதியாக ஊர்மக்கள் அனைவரையும் பார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News