தமிழ்நாடு (Tamil Nadu)

அன்னப்பூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்- EVKS இளங்கோவன்

Published On 2024-09-17 09:37 GMT   |   Update On 2024-09-17 09:37 GMT
  • பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்.
  • மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார்.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியாரின் புகழை உலகெங்கும் பரப்ப முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார். பெரியார் சொன்ன பலவற்றை அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, காமராஜர் சட்டங்களாக மாற்றியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சொன்னதை சட்டமாக கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் ஆளும் ஆட்சி சுயமரியாதை ஆட்சி.

பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும். ஆனால் இது எதுவும் இல்லை. அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், தொலைபேசி மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்.

மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார். மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை. இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக செல்கிறார்கள். வரும் காலங்களில் இது பெரிதாக வெடிக்கும்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கள்ளுக்கடைகளை திறப்பதால் உடல்நிலையை பாதிக்காது. பனை விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மதுவிலக்கில் பூர்ண நம்பிக்கை உள்ளது. கள்ளுக்கடையை திறந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது முழுவதும் எனது தனிப்பட்ட கருத்து.

கட்சியின் கொள்கையை தெரிவிக்காதவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்பவர்கள் மத்தியில் பல வருடங்களாக அரசியல் செய்து தமிழகம் முழுவதும் மக்களிடையே வாக்கு வைத்துள்ள திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என பேசியது தவறில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து கட்சிக்கும் இருப்பது நியாயம் தான்.

ஆட்சியில் பங்கு என்பது கையில் பவர் வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியும் உள்ளன. எனவே திருமாவளவன் தெரிவித்தது தவறில்லை. ஆனால் 2026-ல் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு சாத்தியமாகாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மத வெறியர்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரவேண்டும் என தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் முதல் கடமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வி என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது,

முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என்பது ஒவ்வொரு நாளும் ஓய்வு எடுக்காமல் தொழில் அதிபர்களை சந்தித்தார். இதில் போர்டு மோட்டார் இங்கிருந்து சென்றவர்கள் திரும்ப வருவதாக தெரிவித்தது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமானது.

இதேபோல் ராகுல்காந்தி குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "ஹெச்.ராஜா ஓய்வு பெற வேண்டிய ஆளு. அண்ணாமலை வெளிநாடு போனதால் அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியாதவர். காலாவதியான ராஜா. காலாவதியான ராணியுடன் இருக்க வேண்டியவர். அவர் பொது இடத்தில் ராகுல் பற்றி சொல்வது தேவையற்ற விஷயம் என்றார்.

Tags:    

Similar News