தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த பாரதிய ஜனதா சதி செய்கிறது- ஆர்.எஸ். பாரதி

Published On 2023-02-15 05:12 GMT   |   Update On 2023-02-15 05:12 GMT
  • ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
  • குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணக்கிடுகிறோம்.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தில் ஈரோடு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெற வைக்க ஆளும் கட்சியான தி.மு.க. பண பலத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதுகுறித்து தி.மு.க. அமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளரும் பேசிய ஆடியோ தேர்தல் கமிட்டியில் சமர்பிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இருந்தார்.

பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணக்கிடுகிறோம்.

அவரது வெற்றியை தடுத்து நிறுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சதி செய்கிறது. இதற்கு முன்பு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலை நிறுத்தியது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோளாக தெரிகிறது.

அவ்வாறு தேர்தலை நிறுத்தினால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Tags:    

Similar News