வேட்பாளர் தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. நிபந்தனை?
- சஞ்சையை வேட்பாளராக களம் இறக்க தி.மு.க. தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
- இடைத்தேர்தல் களத்தில் இளங்கோவன் போட்டியிட்டால்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற முடியும் என்று தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளராக களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசித்து டெல்லி மேலிடத்துக்கு பெயர்களை பரிந்துரை செய்வார்கள். அதன் பேரில் டெல்லி மேலிடம் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும்.
ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டு அவர்கள் வேட்பாளர் தேர்வில் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் சஞ்சையை களம் இறக்க காங்கிரசில் ஒரு சாரார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். சஞ்சய் தேர்தலில் போட்டியிட சம்மதித்தால் அதை ஏற்பதாக இளங்கோவன் கூறி வருகிறார்.
ஆனால் சஞ்சையை வேட்பாளராக களம் இறக்க தி.மு.க. தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. இடைத்தேர்தல் களத்தில் இளங்கோவன் போட்டியிட்டால்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற முடியும் என்று தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அவரது மகன் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதுபோல அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் புகழ்பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு என்பவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதனால் அ.தி.மு.க.வில் கே.வி.ராமலிங்கம், தென்னரசு இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.