தமிழ்நாடு

சனாதன விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு

Published On 2023-09-11 14:52 GMT   |   Update On 2023-09-11 14:52 GMT
  • எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
  • உதயநிதி ஸ்டாலின் நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்.

சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த கருத்துக்களும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

அந்த மனுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனுவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வழக்கு பட்டியலிடப்படலாம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடி கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப் பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எடப்பாடி பழனிசாமி தற்போது மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

Tags:    

Similar News