தமிழ்நாடு

தூக்கத்திலிருந்து விழித்து போதைப்பொருள் கடத்தலை தடுக்குமா தி.மு.க. அரசு?

Published On 2024-03-18 07:19 GMT   |   Update On 2024-03-18 07:19 GMT
  • அதிமுக தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.
  • அ.தி.மு.க. நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்த தோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த தி.மு.க. அரசைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அ.தி.மு.க. தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.


மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள்.

போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த தி.மு.க. அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

அ.தி.மு.க. நடத்திவரும் 'போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத தி.மு.க.-விற்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Tags:    

Similar News