தமிழ்நாடு செய்திகள்

வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் படிக்கட்டில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து படுகாயம்

Published On 2023-07-28 11:35 IST   |   Update On 2023-07-28 11:35:00 IST
  • திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர்.
  • கல்லூரி மாணவர் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் கால்களை உரசி பயணம் செய்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் மின்சார ரெயில்களில் தினந்தோறும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் ஆபத்தை உணராமல் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் சாகச பயணம் செய்வது வழக்கமாக உள்ளது. மேலும் ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் அவ்வப்போது கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அவர்களை ரெயில்வே போலீசார் எச்சரித்தும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மின்சார ரெயிலில் சாகச பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உள்ளார். செங்குன்றம் அடுத்த காவாங்கரை பகுதியில் இலங்கை அகதியாக வசிக்கும் 17 வயது மாணவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கல்லூரிக்கு செல்லாமல் சக நண்பர்களுடன் திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அந்த கல்லூரி மாணவர் மின்சார ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் கால்களை உரசி பயணம் செய்தார். இதனை மற்ற பயணிகள் எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் அதே பாணியில் சாகச பயணம் மேற்கொண்டார்.

வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் நின்று விட்டு மின்சார ரெயில் புறப்பட்டபோது எப்போதும் போல் கல்லூரி மாணவர் சாகச பயணம் செய்ய முயன்றார். இதில் கால் சறுக்கியதில் மாணவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவரின் தலையில் 20-க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News