தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2024-03-19 13:14 IST   |   Update On 2024-03-19 13:14:00 IST
  • பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

சேலம்:

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்த இரு மாநிலங்களிலும் கடந்த மாதம் முதலே, அடுத்தடுத்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் கடந்த 15-ந்தேதி பிரசாரம் மேற்கொண்ட மோடி, இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் அஞ்சு விளக்கு பகுதியில் இருந்து சுல்தான்பேட்டை வழியாக பாலக்காடு தலைமை தபால் நிலையம் வரையிலான ஒன்றரை கிலோமீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் நின்றபடி வாகன பேரணி சென்றார்.

அப்போது பாலக்காடு, மலப்புரம், பொன்னானி ஆகிய மக்களவை தொகுதி களில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.

கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி சேலம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்குமார், இந்தியா மேலும் வலிமை அடைவதற்கு மோடியின் ஆட்சி தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து பேசிய அன்புமணி ராமதாஸ், பொதுக்கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பது பா.ம.க.வின் விருப்பம் என்றார்.

இதனிடையே பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பிரதமர் மோடியின் வாகனத்தில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் உடன் வந்தனர்.

Tags:    

Similar News