தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை கொடுக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி

Published On 2023-07-18 12:55 IST   |   Update On 2023-07-18 12:55:00 IST
  • கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர்.
  • மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

சென்னை:

தூய்மை பணியாளர்கள் சாக்கடை கழிவுகளை அகற்றுவதால் காலையிலேயே மது குடிக்கிறார்கள். அதனால் அவரை குடிகாரர்கள் என்று சொல்லக்கூடாது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இதற்கு பதிலளித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன். தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் நாள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 425-ல் தமிழகத்தில், தூய்மைப் பணியாளர்கள், கைகளால் கழிவுகள் அகற்றுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அமைச்சரோ, கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் புனர்வாழ்வுக்கு, மத்திய அரசு, குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு ரூ.40 ஆயிரம், தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு, இரண்டு வருடங்களுக்கு, மாதம் ரூ. 3 ஆயிரம், தூய்மைப் பணி தொடர்பான சுயதொழில் தொடங்க ரூ. 5 லட்சம் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க, நமஸ்தே திட்டம் என பல திட்டங்கள் தீட்டி, ஆண்டுதோறும் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

இந்தத் திட்டங்களை இதுவரை பயன்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News