தமிழ்நாடு
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள குளிப்பட்டியில் ஆதரவற்றோரை மீட்டு அழைத்துச் செல்லும் தன்னார்வலர்.

சாலையில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்டு ஆதரவு அளிக்கும் தன்னார்வலர்

Published On 2022-07-18 04:42 GMT   |   Update On 2022-07-18 04:42 GMT
  • பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் போக்குவரத்தை சரி செய்தல், ஆதரவற்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, மனநல காப்பகங்களில் சேர்த்து வருகிறேன்.
  • தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருவதால் காவல்துறையினர் தனக்கு ஆதரவாக பல உதவிகளை செய்கின்றனர் என நிஷார்சேட் கூறினார்.

ஒட்டன்சத்திரம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நிஷார்சேட் (வயது 55). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தனது இருசக்கர வாகனத்தில் சென்று, சாலையோரங்களில் அழுக்குத் துணியுடன் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்டு அவர்களின் தலைமுடிகளை சுத்தம் செய்து, மொட்டை அடித்து, குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்து விடுவார்.

இதன் பிறகு அவர்களை மன நல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இவர் திருவனந்தபுரம், திருச்சி, ராமேஸ்வரம், ஏர்வாடி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளின் தலைமுடிகளை சுத்தம் செய்து குளிக்க வைத்துள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு வந்திருந்த நிஷார்சேட் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக இது போன்ற பணிகளை செய்து வருகிறேன்.

பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் போக்குவரத்தை சரி செய்தல், ஆதரவற்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, மனநல காப்பகங்களில் சேர்த்து வருகிறேன். தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் நான் சென்று வருவதால் காவல்துறையினர் எனக்கு ஆதரவாக பல உதவிகளை செய்து வருகின்றனர். முழுநேரமாகவும் இப்பணிகளை செய்து வருகிறேன். இது எனக்கு மனநிறைவாக உள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News