தமிழ்நாடு

மணல் குவாரி முறைகேடு வழக்கு- 5 மாவட்ட கலெக்டர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை

Published On 2024-04-25 06:01 GMT   |   Update On 2024-04-25 06:58 GMT
  • அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம்.
  • பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும் அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மணல் குவாரிகளின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த தொழில் அதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 24 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட கலெக்டர்கள் பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் ஆஜராகி மணல் குவாரிகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரிகள் மூலமாக கிடைத்த தொகையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லையே? சில தகவல்களைத் தானே கலெக்டர்களிடம் அமலாக்கத்துறையினர் கேட்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அந்த மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆனால் கரூர், திருச்சி, அரியலூர், வேலூர் மாவட்டங்களுக்கும், அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த புகாரும் கிடையாது. வழக்கும் கிடையாது.

பின்னர் எந்த அடிப்படையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு கலெக்டர்கள் ஆஜராக முடியும்? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக பெற்ற தொகையை வேறு ஒரு மாவட்டத்தில் உள்ள குவாரியில் முதலீடு செய்திருந்தால் என்ன செய்வது? அதை கண்டறிய வேண்டும் என்பதே அமலாக்கத்துறை விசாரணையின் நோக்கம் என்றனர்.

குற்றம் எங்கு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசும், கூடுதல் தலைமைச் செயலாளரும் மாவட்ட கலெக்டர்களும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றிருப்பது விசித்திரமானது மட்டுமின்றி அசாதாரணமானது. இது முற்றிலும் தவறானது என நாங்கள் கருதுகிறோம்.

எனவே அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மேற்கண்ட 5 மாவட்ட கலெக்டர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

அப்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அதன்படி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேர்தலுக்கு பிறகு 5 மாவட்ட கலெக்டர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏப்ரல் 25-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், கரூர் கலெக்டர் தங்கவேல், அரியலூர் கலெக்டர் ஆனி மேரி சொர்னா, தஞ்சை கலெக்டர் தீபக் ஜோக்கப், வேலூர் கலெக்டர் சுப்பு லட்சுமி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

5 மாவட்ட கலெக்டர்களும் குவாரி அனுமதி ஆவணங்களுடன் உயர் அதிகாரி முன்பு ஆஜரான நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி அருகில் உள்ள கிளை மண்டல அலுவலகத்தில் இருப்பதால் அங்கு செல்லுமாறு விசாரணை இடத்தை திடீரென மாற்றினார்கள்.

அதன்படி 5 மாவட்ட கலெக்டர்களும் ஒரே காரில் ஏறி பக்கத்தில் இருந்த அமலாக்கத்துறை கிளை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

மணல் குவாரி டெண்டர் நடைமுறை விதிகளின்படி பின்பற்றப்பட்டதா? ஒவ்வொரு நாளும் விற்கப்படும் மணல் அளவு எவ்வளவு? அதற்கு முறையான அனுமதி கொடுக்கப்பட்டதா? குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டதா?

எவ்வளவு பேருக்கு மணல் விற்கப்பட்டுள்ளது? அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக மணல் எடுக்கப்பட்டு விற்கப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கலெக்டர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்கு ஒவ்வொரு கலெக்டர்களும் சொன்ன பதில்கள் அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News