தமிழ்நாடு செய்திகள்

மழை பாதிப்பு- அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2023-12-20 11:51 IST   |   Update On 2023-12-20 13:26:00 IST
  • தென்மாவட்டங்களில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு.
  • 4 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.

சென்னை:

டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை திரும்பினார்.

அதன் பிறகு வீட்டுக்கு சென்று விட்டு காலை 11.30 மணியளவில் மெரினா கடற்கரை ரோட்டில் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார்.

அங்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதுவரை மேற்கொண்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து கூறினார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர்களும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். அவர்களிடம் வெள்ள பாதிப்பு குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இன்னும் எந்தெந்த பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை? அந்த பகுதியில் இப்போதைய நிலவரம் என்ன? என்றும் கேட்டார்.

அதற்கு மாவட்ட கலெக்டர்கள் விரிவாக பதில் அளித்தனர். பின்னர் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று பேசி விவரங்கள் கேட்டறிந்தார்.

அப்போது தூத்துக்குடி மாநகர எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு நிவாரண முகாமில் மீட்கப்பட்ட மக்கள் 2 பேருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக பேசினார்.

அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் பகுதியில் தண்ணீர் வடிந்து விட்டதா? முகாமில் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்றும் விசாரித்தார்.

துண்டிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கும் அதிகாரிகள் சென்று உதவி செய்து வருகின்றனர். சாப்பாடு வசதி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். மின்சார சப்ளை வழங்கவும் போர்க்கால அடிப்படையில் பணி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News