தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை மகா தீப விழாவுக்கு 2692 சிறப்பு பஸ்கள் இயக்கம்- 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Published On 2022-11-05 10:06 IST   |   Update On 2022-11-05 10:06:00 IST
  • பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 6-ந்தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-

கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள். 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

அங்கிருந்து பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

வரும் பவுர்ணமி கிரிவலத்தை தீபத் திருவிழாவுக்கான ஒத்திகையாக பார்க்க வேண்டும். கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை உள்ளே அனுமதித்து, வெளியே செல்வதற்கான வழி தடத்தை இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும்.

தரிசனத்துக்கு ஒரு சிலரை நீண்ட நேரம் அனுமதிப்பதால், கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்றார்.

12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,692 சிறப்பு பஸ்கள் மூலம் 6,500 நடைகள் இயக்கப்பட உள்ளன.

மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல் நிகழ்வை விஐபிக்கள் தரிசிப்பதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News