தமிழ்நாடு

ஓட்டல் வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை படத்தில் காணலாம்.


ஓட்டல் வளாகத்தில் நுழைந்த 2 யானைகள்- அச்சத்தில் உறைந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-30 04:58 GMT   |   Update On 2023-05-30 04:58 GMT
  • பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.
  • ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன.

மேட்டுப்பாளையம்:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் வனத்தில் வசிக்கும் மான், காட்டு மாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன.அவ்வாறு வரும் வனவிலங்குகள், அங்குள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலங்களாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருகிறது.நேற்று இரவு பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.

அந்த சாலையை கடந்த காட்டு யானைகள் சாலையின் மறுபுறம் உள்ள உணவகத்திற்குள் புகுந்தது. அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விடலாம் என நினைத்து காட்டு யானைகள், உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முயன்றன. ஆனால் அது முடியாமல் போகவே சிறிது நேரம் அங்கேயே சுற்றிதிரிந்தது. இதனால் ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

மேலும் வனத்துறையினருக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் காட்டு யானைகளை அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதன் காரணமாக ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாகவும், வாகன போக்குவரத்து அதிகமாகவும் காபணப்படும் ஊட்டி சாலையை கடந்த 2 காட்டு யானைகளை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

சமீபகாலமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காட்டு யானைகளின் வலசைப்பாதைகளை மறித்தும், மறைத்தும் கட்டிடங்கள் தனியார் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது.

இதன் காரணமாக யானைகள் வேறுவழியின்றி ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே வனத்துறையினர் யானைகளின் வலசைப்பாதைகளை கண்டறிந்து அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினால், மட்டுமே காட்டு யானைகள் எளிதாக வனப்பகுதியின் ஒருபுறமிருந்து மற்றொரு புறம் கடந்து செல்ல இயலும்.

இப்படிதான் நேற்று மாலை ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. வனத்துறையினரின் முயற்சிக்குப்பின் மற்றொரு பாதை வழியாக காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News