தமிழ்நாடு

பாஜக பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா சஸ்பெண்ட்: அண்ணாமலை நடவடிக்கை

Published On 2022-11-24 17:11 GMT   |   Update On 2022-11-24 17:11 GMT
  • ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு சூர்யா சிவா, டெய்சி சரண் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
  • சஸ்பெண்ட் காலத்தில் கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு சூர்யா சிவா பணியாற்றலாம்

சென்னை:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதி அவர்களிடம் 22.11.2022 அன்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முன் திரு சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகிய இருவரும் ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சுமூகமாக சகோதர சகோதரிகளாக பயணிக்க விரும்புவதாக ஒழுங்கு குழுவினரிடமும் பின் பத்திரிக்கையாளர்களிடமும் தெரிவித்தனர்.

நடந்தவை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. ஆகவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags:    

Similar News