தமிழ்நாடு செய்திகள்

கோடை விடுமுறை எதிரொலி- தென்மலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2023-04-30 13:04 IST   |   Update On 2023-04-30 13:04:00 IST
  • தென்மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
  • சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் செந்துருணி படகு சவாரி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

நெல்லை:

கேரள மாநிலம் தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் கோடை சீசனை அனுபவிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரியங்காவு அருகே உள்ள கும்பவுருட்டி அருவியில் தண்ணீர் பற்றாக்குறையால் தமிழக மக்கள் சற்று வருத்தம் அடைந்துள்ள நிலையில், பாலருவியில் குளிப்பதற்கு பிரதான நீர்வழிப்பாதைக்கு கீழே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டினாலும், அடுத்த சில நாட்களில் கோடை மழை பெய்தால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும்.

தென்மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு காடு, சாகச மண்டலம், ஓய்வு மண்டலம், மனிதர் பூங்கா, படகு சவாரி உள்ளிட்டவை செய்து மகிழலாம். தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் செந்துருணி படகு சவாரி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதில் 4 பேர் படகு பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலைகளை ரசிக்கக்கூடிய ஜீப் சவாரிக்கும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.

புனலூரில் இருந்து சுற்றுலா தலங்களைப் பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த பயணத்தின்போது, லுக்அவுட் தடுப்பணை, முழு கல்லடையார் வலது மற்றும் இடது கரை கால்வாய்கள் வழியாக தண்ணீர் பாய்வதை காணலாம். தும்பாறை, புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைச்சரிவில் பனை தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. அங்குள்ள அம்பநாடு தேயிலை தோட்டத்திற்கும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று சுற்றி பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News