தமிழ்நாடு

போதைப் பொருளால் தள்ளாடி கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இந்தியாவை காக்க போகிறாரா? பாரிவேந்தர்

Published On 2024-04-16 08:11 GMT   |   Update On 2024-04-16 08:11 GMT
  • தொகுதி மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றக் கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
  • பொதுமக்கள் சிந்தித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாமல் பொதுமக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் ராஜா தியேட்டர் மற்றும் சங்கு பகுதியில் பரப்புரை மேற்கொள்ள சென்ற டாக்டர் பாரிவேந்தருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய பாரிவேந்தர், தொகுதி மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றக் கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் நகரம் வெங்கடேசபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களிடையே உரையாற்றிய பாரிவேந்தர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாயை, மக்களின் தேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பதாக தெரிவித்தார். தன்னை மீண்டும் வெற்றிபெறச் செய்தால், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு உயர் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி யாக செய்த மக்கள் நற்பணிகள் குறித்த புத்தகத்தை வழங்கி, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

இதனைத்தொடர்ந்து, துறைமங்கலம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது, பெரம்பலூரில் ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஆயிரத்து 200 ஏழை மாணவர்களை இலவசமாக படிக்க வைத்து, பட்டதாரிகளாக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். மோடி நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து கொண்டிருக்கிறார் என தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், ஆனால், தமிழகத்தில் முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என விமர்சித்தார். அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதால்தான், அரசு அலுவலர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார். போதைப் பொருளால் தள்ளாடி கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இந்தியாவை காக்க போகிறாரா? என கேள்வி எழுப்பிய பாரிவேந்தர், ஸ்டாலின் இந்தியாவை உடைக்கத்தான் உள்ளார் என சாடினார். தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பாதி பேருக்கு வரவில்லை என குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், பொதுமக்கள் சிந்தித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News