தமிழ்நாடு

எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை அரசியலாக்குகிறார் அண்ணாமலை: அமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2023-12-13 07:51 GMT   |   Update On 2023-12-13 07:51 GMT
  • வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே.
  • பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு.

சென்னை:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனத்துக்கு சென்ற ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.

இதில் 3 ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோவில் காவலாளிகளும் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அரசையும் விமர்சித்தார். இதுபற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

எதிர்பாராமல் நடந்த சம்பவம். யாரையும் யாரும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை.

வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே. இந்த விவகாரத்தை தீர விசாரிக்கவும் அதேநேரம் சுமூகமாக கையாளும்படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த பிரச்சனை நேற்றே சுமூகமாகி விட்டது.

இந்த பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால் அண்ணாமலை வழக்கம் போலவே இந்த பிரச்சனையையும் ஊதி பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். அவர் எந்த முக மூடியோடு வந்தாலும் மக்கள் ஏற்கப்போவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News