192 இடங்களில் மழைநீர் தேங்கியது: சென்னையில் வெள்ள மீட்பு பணிகள் தீவிரம்
- சென்னையில் கடந்த வாரத்தில் மழை பெய்தபோது 37 இடங்களில் மழை நீர் தேங்கியது.
- சென்னையில் நேற்று 10 செ.மீ. மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது.
சென்னை:
சென்னையில் நேற்று பெய்த மழையில் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கியது. வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
கொட்டும் மழையிலும் மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்து அதனை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
சென்னையில் கடந்த வாரத்தில் மழை பெய்தபோது 37 இடங்களில் மழை நீர் தேங்கியது. ஆனால் தற்போது 192 இடங்களில் மழைநீர் தேங்கியது. வீடுகள், தெருக்களில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். டிராக்டர் மற்றும் மோட்டார் பம்ப் செட் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதே போல அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், பரந்தாமன், தாயகம் கவி, மயிலை வேலு, ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர் மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மழைநீரை வெளியேற்றினர்.
விடிய விடிய நடந்த மீட்பு பணியில் 50 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டது. மீதமுள்ள 142 பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும் கெங்குரெட்டி, நுங்கம்பாக்கம், ஸ்டான்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதை ஊழியர்கள் வெளியேற்றி வருகிறார்கள்.
சென்னையில் நேற்று 10 செ.மீ. மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்கள் மீது தொடர்ந்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் இன்னும் ஒரு சில இடங்களில் இருந்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.