வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் நிரப்பி உள்ளனர்: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தகவல்
- மதுரை ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.
- ரெயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
ரெயில் தீ விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் நிரப்பி உள்ளனர். எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது.
வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். லக்னோவில் இருந்தும் சிலரை அழைத்து விசாரிக்க வேண்டி உள்ளது.
விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.