தமிழ்நாடு செய்திகள்

தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

Published On 2023-12-21 08:55 IST   |   Update On 2023-12-21 08:55:00 IST
  • தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் கம்பீரமாக இருக்கிறது.
  • முதலமைச்சருக்கு மக்களை விட கூட்டணிதான் முக்கியமா?.

நெல்லை:

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள குடியிருப்புகள், கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த வெள்ளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் கம்பீரமாக இருக்கிறது. ஆனால் மேலநத்தம்-கருப்பந்துறை இடையே 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலம் இடிந்து விட்டது.

தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நள்ளிரவில் அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்து விட்டு உள்ளனர். இதுவே அதிக பாதிப்புக்கு காரணம் ஆகும். முதலில் மக்களுக்கு மின் வினியோகம் வழங்க வேண்டும். குடிநீர், சுகாதார வசதி செய்து கொடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரமும், கடைகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வந்து நேரில் பார்க்கவில்லை. மீட்பு பணிகளையும் கவனிக்கவில்லை. மக்களை சந்திக்க வராமல், கூட்டணி குறித்து பேசுவதற்காக அவர் டெல்லிக்கு சென்று உள்ளார். தி.மு.க. அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை மட்டுமே செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படவில்லை. முதலமைச்சருக்கு மக்களை விட கூட்டணிதான் முக்கியமா?. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் முதலமைச்சர் வந்து நிற்க வேண்டும். அப்படி நின்றால்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், வேலை செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News