தமிழ்நாடு

பொங்கல் விடுமுறை- நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-01-16 04:12 GMT   |   Update On 2023-01-16 04:12 GMT
  • ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
  • நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்பநிலையும் காணப்படுகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிட நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்த வண்ணம் இருப்பர்.

இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து பொங்கல் விடுமுறையை உற்சாகமாக களிக்க சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

நேற்று பொங்கலையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்.

புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்பநிலையும் காணப்படுகிறது. இத்தகைய ரம்மியமான காலநிலையை அனுபவிக்கும் விதமாக குன்னூர், கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களான டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, கொடநாடு காட்சி முனை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News