சென்னையில் 10 கி.மீ. காரில் பயணிக்கும் பிரதமர் மோடி
- அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
- ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
பிரதமர் மோடி நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். தெலுங்கானாவில் இருந்து பிற்பகலில் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார். அங்கு அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வந்து இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி வருகையின்போது மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் வரும். எனவே 3 ஹெலிகாப்டர்களையும் விமானப்படை வீரர்கள் தரையிறக்கி ஒத்திகை பார்த்தனர்.
நந்தனம் திடலை சுற்றிலும் மரங்கள் அதிக அளவில் இருப்பதால் ஹெலிகாப்டர்களை இறக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர். இதனால் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து பிரதமரின் மோடியின் பயணத்தில் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது. கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்து விட்டு ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து 10 கிலோ மீட்டர் காரில் பயணம் செய்து பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் திடலுக்கு வருகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மீண்டும் 10 கிலோ மீட்டர் காரிலேயே பயணம் செய்து விமான நிலையம் திரும்புகிறார்.