தமிழ்நாடு செய்திகள்

வந்தே பாரத் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி- ரெயிலின் அவசர கதவை திறந்து வைத்த 2 ஊழியர்கள் சஸ்பெண்டு

Published On 2023-09-29 11:45 IST   |   Update On 2023-09-29 11:45:00 IST
  • திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.
  • விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

சேலம்:

சென்னை-கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ந் தேதி வந்தே பாரத் ரெயிலில் சென்னை கீழக்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70). அவரது மனைவி ரோஸ் மார்க் கரெக்ட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.

மாலை 6 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் 4-வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ் ரெயிலின் அவசர கதவு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில் அது எப்படி தானாக திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா நேரடியாக சேலம் ரெயில்வே நிலையத்துக்கும் சென்று விசாரித்தார். பின்னர் கோவை புறப்பட்டு சென்ற அவர் விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில் சேலம் ரெயில்வே நிலைய பகுதியில் இருந்து 2 ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளில் இறங்கி வந்து வந்தே பாரத் ரெயிலின் அவசரக் கதவு பட்டனை அழுத்தி திறந்து ரெயிலில் ஏறி மறுமுனையில் 4-வது பிளாட்பார்மில் இறங்கி சென்றது தெரியவந்தது.

இந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில் அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவசர கதவை திறந்து வைத்த ரெயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள் சேலம் ரெயில்வே நிலைய பாயிண்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News