தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா? வைரல் வீடியோவுக்கு அண்ணாமலை விளக்கம்

Published On 2024-03-29 16:50 GMT   |   Update On 2024-03-29 16:50 GMT
  • பிரசாரத்தை துவங்கி ஒட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஆய்வு செய்ய காவல் துறைக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுக்க சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவங்கி ஒட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு மறைமுகமாக பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய காவல் துறைக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வைரல் வீடியோ தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில், "கோவை ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்கு பதில், கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு பதில் அளிக்க முடிவு செய்துள்ளார்."

"ஆரத்தி எடுப்பவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக வெகுமதி அளிப்பது நம் கலாச்சாரம். இந்த வழக்கத்தை நாங்கள் தேர்தல்களில் பின்பற்றுவது கிடையாது. மற்றவர்களை போன்று ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நாங்கள் நம்பவில்லை என ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்."

"இன்று பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளால் உண்மையான பணப் பரிமாற்றம் நடக்கும் போது கோவை ஆட்சியர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News