தமிழ்நாடு

பிரபல ரவுடி ஜனா கட்டியுள்ள சொகுசு பங்களா


3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து காங்கயத்தில் ரூ.1 கோடியில் சொகுசு பங்களா கட்டிய பிரபல ரவுடி கைது

Published On 2023-06-06 04:33 GMT   |   Update On 2023-06-06 04:33 GMT
  • சொகுசு பங்களா கட்டி வரும் நபர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.
  • வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சுரேசின் வலது கையாக செயல்பட்டு வந்துள்ளார்.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கொடுவாய் பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகரில் ஒருவர் சொகுசு பங்களா கட்டி வந்தார்.ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் தனியாக வீடு கட்டி வந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சகல வசதிகளுடன் பிரம்மாண்டமாக வீடு ஒன்று கட்டப்பட்டு வந்தது. வீட்டை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, 90 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது.

அந்த வீட்டை கட்டுபவர் யார் என்று பணியில் ஈடுபட்டு இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சொகுசு பங்களா கட்டி வரும் நபர் சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 40) என்பது தெரியவந்தது.

அவர் மீது சென்னை கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10 கொலை வழக்குகள் மற்றும் 15 கொலை முயற்சி வழக்குகள், திருட்டு வழக்குகள் என 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.

ஒரு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த ஜனா அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். தனிப்படை அமைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் அவர் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கொடுவாய் பகுதியில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததுடன், கொள்ளையடித்த பணத்தில் ரூ.1கோடிக்கு சொகுசு பங்களா கட்டி வந்துள்ளார்.

இதையடுத்து ஜனாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் இது குறித்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை போலீசார் காங்கயம் வந்து ஜனாவை அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஜனா, போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சூச்சி சுரேசின் வலது கையாகவும் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

Tags:    

Similar News