தமிழ்நாடு

தரமணியில் 114 கி.மீ. வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 2 மாணவர்கள் பலி

Update: 2022-12-01 10:07 GMT
  • அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோடு பிரவீனும், ஹரியும் கீழே விழுந்தனர்.
  • மோட்டார் சைக்கிளை ஓட்டிய பிரவீனுக்கு லைசன்சு உரிமம் இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வேளச்சேரி:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் அதிவேகத்தில் பயணம் செய்து விபத்துக்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிசென்று அதனை செல்போனில் படம்பிடித்த மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தரமணி, தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3-வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்(வயது19). தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த நண்பரான பிளஸ்-2 மாணவர் ஹரியுடன்(17) விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றார். பிரவீன்மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

அவர்கள் தரமணி 100 அடி சாலையில் சென்றபோது அதிவேகத்தில் செல்ல வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை அதிவேகமாக 114 கிலோ மீட்டர் வேகம் வரை ஓட்டிச் சென்றனர்.

இதனை பின்னால் அமர்ந்து இருந்த ஹரி தனது செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.

தரமணி சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்று திரும்ப முயன்றது. இதனை எதிர்பார்க்காமல் வந்த பிரவீன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றார்.

அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோடு பிரவீனும், ஹரியும் கீழே விழுந்தனர். இருவரும் மோட்டார்சைக்கிளில் சறுக்கியபடி பல அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டனர்.

இதில் பிரவீனும், ஹரியும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார்.

ஹரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஹரியும் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பிரவீனுக்கு லைசன்சு உரிமம் இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசைப்பட்டு மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

Similar News