தமிழ்நாடு

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்: மத்திய மந்திரிக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின்

Published On 2024-03-19 15:14 GMT   |   Update On 2024-03-19 15:14 GMT
  • ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என்றார்.
  • ஷோபாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை:

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இதற்கிடையே, மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலாஜே சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஷோபாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜேவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பாஜக அமைச்சருக்கு கடும் கண்டனம். பா.ஜ.க.வின் பொறுப்பற்ற அறிக்கை. ஒருவர் விசாரணை அதிகாரியாக இருக்கவேண்டும் அல்லது ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்புடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்கவேண்டும். அத்தகைய கூற்றுகளுக்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகிறது.

பா.ஜ.க.வின் இந்தப் பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் மறுப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பிரதமர் முதல் கேடர் வரை, பா.ஜ.க.வில் உள்ள அனைவரும் இந்தக் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

இந்த வெறுப்புப் பேச்சை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News