முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை ஒத்திவைப்பு
- கொரோனா பரிசோதனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
- கொரோனா தொற்று குணமடைந்த பிறகு முதல்வரின் நிகழ்ச்சிகள் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை கோவை வருவதாக இருந்தது.
மேலும் மறுநாள் 15-ந் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறும் வேளாண் கண்காட்சியை பார்வையிடுவதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர பொள்ளாச்சியில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதாக இருந்தது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மும்முரமாக செய்து வந்தனர். மேடை அமைக்கும் பணிக்கு கால்கோள் நடப்பட்டு மேடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் சோர்வு, காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவரது கோவை வருகை மற்றும் கோவையில் பங்கேற்க இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பிலான பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குணமடைந்த பிறகு முதல்வரின் நிகழ்ச்சிகள் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், முதல்-அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 14, 15-ல் அவர் கோவையில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.