கவர்னரை சந்திக்க 2 மாதமாக காத்து இருக்கிறோம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.
- இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் கவர்னரை சந்திக்க காத்திருக்கிறோம்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு கையடக்க கணினியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விளக்கங்களை கேட்டுள்ளது இன்னும் இரண்டு தினங்களில் விளக்கம் அளிக்கப்படும்.
மருத்துவத்துறையின் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.1,941 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டமைப்பு பணிகளை அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த டிசம்பர் 31-ந்தேதியோடு டாக்டர் எம்.ஜிஆர் மருத்துவமனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு முடிவு பெற்றது. கடந்த ஜனவரி 4-ந்தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு உருவாக்கப்பட்டது. கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
அந்தக் குழு அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் கவர்னர் தான் இனி அந்த குழுவிற்கு வழிகாட்ட வேண்டும்.
கவர்னரின் சார்பில் அந்தக் குழுவிற்கு அலுவலர் ஒருவரை நியமிப்பார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு அந்த தேடுதல் குழுவானது 3 பேர்களை தேர்ந்தெடுத்து கவர்னரிடம் வழங்குவார்கள். அந்த மூவரில் ஒருவரை கவர்னர் விரைவில் தேர்ந்தெடுப்பார் என்று கருதுகிறோம்.
தற்போது மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனை சேவைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம். கவர்னரை சந்திப்பது விதி அல்லது மரபு தான். ஆனால் அவருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் அவரை சந்திக்க காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.