காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 51.98 அடியாக குறைந்தது
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 295 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 1,891 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 101.82 அடியாக உள்ளது.
அதுபோல் கபினி அணைக்கு 1,630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 73.77 அடியாக உள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் இன்று நீர் திறப்பு சற்று குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த 2 அணைகளில் இருந்தும் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,024 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 2,031 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 52.78 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 51.98 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.