என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து ரூ.2 கோடியே 30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
- இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண் அடைந்தனர்.
- நேற்று கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.
சென்னை:
மண்ணடி அருகே உள்ள முத்தியால்பேட்டை, மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார்.
கடந்த 13-ந்தேதி இவரது வீட்டுக்கு வந்த மர்மகும்பல் தாங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்று தெரிவித்தனர். மேலும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி வீடு மற்றும் செல்போன் கடைகளில் சோதனை நடத்தினர். பின்னர் ரூ.2 கோடியே 30 லட்சம், 6 செல்போன், லேப்-டாப், கம்ப்யூட்டர் சி.பி.யூ. ஆகியவற்றை எடுத்துச்சென்றுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து விசாரித்த போதுதான் மர்ம நபர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து பணத்தை சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீசில் முகமது அப்துல்லா புகார் செய்தார். முதலில் கொள்ளை போனது ரூ.20 லட்சம் என்று புகார் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.2 கோடியே 30 லட்சம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக மண்ணடி அங்கப்பன் தெருவை சேர்ந்த முகமது பாசில் என்பவரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றினர். கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டது யார்? இதன் பின்னணி என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.