தமிழ்நாடு

டெண்டர் முறைகேடு- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2023-07-18 05:38 GMT   |   Update On 2023-07-18 06:00 GMT
  • 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில் எந்த தவறும் இல்லை.
  • ஆட்சி மாற்றம் காரணமாக பழைய புகாரை புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை.

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணிகளை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதில் ரூ. 4800 கோடி முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் செய்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சிறப்பு புலனாய்வு அமைப்பு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ். பாரதி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் இந்த மனுவை ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பியது. இதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் இருந்து வந்தது.

அப்போது சிறப்பு புலனாய்வு அமைப்பை அமைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தன்னுடைய மனுவை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ். பாரதி தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான முகமது ரியாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா இந்த குற்றச்சாட்டு குறித்து புதிதாக விசாரணை நடத்த விஜிலென்ஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் உத்தரவை விரைவில் பிறப்பிப்பதாக கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த உத்தரவை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

அதில் சிறப்பு புலனாய்வு விசாரணை கேட்ட ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்தார்.

2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில் எந்த தவறும் இல்லை. அதில் குறை காண எதுவும் இல்லை.

ஆட்சி மாற்றம் காரணமாக பழைய புகாரை புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News