தமிழ்நாடு

அ.தி.மு.க. பெயரில் இணைய தளம் நடத்த கே.சி.பழனிசாமிக்கு தடை

Published On 2023-12-03 07:25 GMT   |   Update On 2023-12-03 07:25 GMT
  • அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை பதவிக்கு எதிராக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
  • அ.தி.மு.க. பெயரில் இணைய தளம் நடத்தி வருவதுடன் தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்கு உரிமை கோரி வந்தார்.

சென்னை:

அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாணமை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து 2018-ல் நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை பதவிக்கு எதிராக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும், இணைய தளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர் பேடிலும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை தொடர்ந்து கே.சி.பழனிசாமி கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் அ.தி.மு.க.வில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என கூறி அ.தி.மு.க. நிர்வாகி போலவே தற்போதும் கே.சி.பழனிசாமி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

அது மட்டுமின்றி அ.தி.மு.க. பெயரில் இணைய தளம் நடத்தி வருவதுடன் தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்கு உரிமை கோரி வந்தார்.

அவர் அ.தி.மு.க.வின் கட்சி பெயரையும், சின்னத்தையும் 2021-ம் ஆண்டு முதல் தனது இணைய தளத்தில் பயன்படுத்தி வந்ததால் இதுகுறித்து இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவரிடம் அ.தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த நவம்பர் 29-ந்தேதி அளித்த தீர்ப்பில் கே.சி.பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், முகவர்கள், வேலையாட்கள் போன்றோர் www.aiadmk.org இணைய தளம் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்ததோடு, அ.தி.மு.க. கட்சிக்கு ரூ.50 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News