தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம், திருவள்ளூரில் அதிகாலை முதல் பரவலாக மழை

Published On 2023-09-21 12:22 IST   |   Update On 2023-09-21 12:22:00 IST
  • பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
  • திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம்:

தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது

இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை கொட்டியது. இதனால் காலை முதலே குளிர்ச்சியான சூழல்நி லவியது.

பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வெள்ளை கேட், ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, பரந்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

அதிகாலையில் பலத்த மழை கொட்டியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். மிதமான மழையே பெய்து வருவதால் வழக்கம்போல் கல்லூரிகளும் செயல்படும் என்றார்.

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி மழைநீர் மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 630 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது ஏரியில் 2624 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

Tags:    

Similar News