தமிழ்நாடு

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்- கைதான அரசு கல்லூரி பேராசிரியர் ஜெயிலில் அடைப்பு

Published On 2023-05-30 06:39 GMT   |   Update On 2023-05-30 06:39 GMT
  • கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
  • கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களது 27 வயது மகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம்-ஹூப்ளி ரெயிலில் எஸ்.3 முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்ட னர்.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில், ராசிபுரம் வந்தபோது அதே பெட்டியில் பயணம் செய்த சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் மகன் சையது இப்ராகிம் (வயது 57), என்பவர் அந்த இளம்பெண்ணை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிடவே, பெற்றோர் உள்பட அனைவரும் சேர்ந்து சையது இப்ராகிமை பிடித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அந்த இளம்பெண், ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது இப்ராகிமை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர், சேலம் அரசு கலை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி, அவரை 15 நாள் காவலில் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார், சையது இப்ராகிமை அழைத்துச்சென்று நேற்று இரவு சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் ஓரிரு நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிகிறது.

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News